உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படும் கர்நாடக இசையை வளர்த்து உயர்ந்த நிலைக்குக் கொணர்ந்து, தற்போது பேணி காத்தும் வருகின்ற பல இசைக் கலைஞர்களின் பங்கு அளப்பறியது. சில கலைஞா்களின் பெயா்கள் இசை வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளன.
அவர்களில் சிலரை பற்றிய தொகுப்பு (BIOGRAPHY) தான் இந்த தளம்
எம். எஸ். சுப்புலக்ஷ்மி
பிறப்பு: செப்டம்பர் மாதம் 16 ம் நாள் , 1916
இடம்: மதுரை, தமிழ்நாடு (இந்தியா)
பணி: கர்நாடக இசைப் பாடகி
இறப்பு: டிசம்பர் மாதம் 11ம் நாள் , 2004
எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள், தென்மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மற்றும் வடமொழிகளில் சமஸ்கிருதம், வங்காளம், குஜராத்தி இந்தி போன்ற பல்வேறு இந்திய மொழிகளில் ஒரு பாடகியாக, நடிகையாக தன்னுடைய முத்திரையைப் பதித்ததால் ‘இசைப் பேரரசி’ என அன்போடு அழைக்கப்பட்டார். அவரின் சாதனைகள் சிலவற்றைக் காண்போம்.
- எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், 16-09-1916 தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் சுப்பிரமணி அய்யர், சண்முகவடிவாம்பாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இயற்பெயர் குஞ்சம்மா. இவரின் தாய் சண்முகவடிவு வாய்ப்பட்டு, வீணைமீட்டல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். இவரின் பாட்டி அக்கம்மாலும் வயலின் வாசிப்பதில் புகழ்பெற்று விளங்கினார்.
- இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், சிறு வயதிலிருந்தே சுப்புலட்சுமி அவர்கள் இசையில் அதீத ஆர்வத்துடன் திகழ்ந்தார். செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்களிடம் கர்நாடக சங்கீதம் கற்கத் தொடங்கி பின், பண்டிட் நாராயணராவ் வியாஸ் என்பவரிடம் இந்துஸ்தானி இசையையும் கற்றுணர்ந்தார். அதன் பின், தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். தன்னுடைய தாயாருடன் பல கச்சேரிகளில் பங்குபெற்ற அவர், பாலக்காடு டி.எஸ். மணி ஐயர், காரைக்குடி சாம்பசிவா ஐயர், செம்மை வைத்தியநாத பாகவதர் ஆகியோரின் இசை கச்சேரிகளை தன் தாயாருடன் நேரில் சென்று ரசித்தார்.
- ‘எம்.எஸ்’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட இவரின் முதல் குரு தாயார் சண்முகவடிவாம்பாள் அவர்களே. 1929ல் இவரின் முதல் கச்சேரி “சென்னை மியூசிக் அகாடமியில்” அரங்கேற்றப்பட்டது. தன்னுடைய இனிமையான குரல் வளத்தால் அனைவரையும் தன் வசப்படுத்திய எம்.எஸ். அவர்கள், தென்னிந்தியாவின் தலைசிறந்த கர்நாடக இசை பாடகியாக வலம் வந்தார். ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’, ‘ஒளிப்படைத்த கண்ணினாய் வா வா வா’, ‘வாழிய செந்தமிழ்’ போன்றவை இவரின் மிகவும் பிரபலமான பாடல்களில் சில.
- உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி அவர்கள் எழுதிய ஆங்கில பாடல் “மே தி லார்ட் ஃபார்கிவ் அவர் சின்ஸ்” -ஐ எம்.எஸ்.அவர்கள், ஐ.நா.சபையில் பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இன்றும் அனைவரின் வீடுகளிலும் தினமும் ஒலிக்கின்ற ‘வெங்கடேச சுப்ரபாதம்’, ‘ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்’, ‘ரங்கபுர விஹாரா’ போன்ற கீர்த்தனைகள் எம்.எஸ். அவர்களின் குரலில் பிரபலமான பாடல்களில் சில .
- திரைப்படத்துறையில் எம்.எஸ். அவர்கள் 1938 ஆம் ஆண்டு, கே.சுப்பரமணியம் இயக்கத்தில் “சேவாசதனம்” என்னும் படத்தில் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் அவரே பாடி, நடித்து இருந்தார். ஆர்.டங்கன் இயக்கிய “சகுந்தலை” திரைப்படம், எம்.எஸ். அவர்களின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. நாரதராக “சாவித்திரி” என்ற திரைப்படத்தில் நடித்து மேலும் பாராட்டைப் பெற்றார்.
- இவருக்கு 1945-ம் ஆண்டு வெளிவந்த “மீரா” திரைப்படம், மிகப் பெரும் புகழைத் தேடித்தந்தது. எம்.எஸ். அவர்கள் குரலில் வெளிவந்த “கிரிதர கோபாலா”, “எனது உள்ளமே”, “காற்றினிலே வரும் கீதம்”, “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த” போன்ற பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் கேட்போரின் உள்ளதை உருக வைப்பவை. இப்படம் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது .
திருமண வாழ்க்கை:
- எம்.எஸ்.அவர்கள், ‘சகுந்தலை’ படத்தின் தயாரிப்பாளரான கல்கி சதாசிவம் அவர்களை 1940-ல் சென்னை திருநீர்மலை கோவிலில் மணம் செய்து கொண்டார். கணவர் சதாசிவமும் ஒரு இசை பிரியராக, இசைக் கற்றவராக இருந்தார்.
இறுதி காலம்:
தனது கணவரின் மறைவிற்கு பிறகு கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்ட எம்.எஸ். அவர்கள், சென்னை மியூசிக் அகாடமியில் கடைசியாக 1997லில் பாடினார். டிசம்பர் 12, 2004-ல் தன்னுடைய 88வது வயதில் எம்.எஸ். அவர்கள் இயற்க்கை எய்தினார்.
விருதுகள்:
- இந்திய அரசு இவருக்கு, இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய விருதான “பத்ம பூஷன்” 1954-ம் ஆண்டு வழங்கியது.
- “ரவீந்திர பாரதி கலாச்சார அகாடமி விருது” 1967 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
- 1968-ம் ஆண்டு “சங்கீத கலாநிதி விருது” “சென்னை மியூசிக் அகாடமி” மூலம் வழங்கப்பட்டது.
- 1970-ம் ஆண்டு “சென்னை தமிழ் இசைச்சங்கம்” இவருக்கு இசை பேரறிஞர் விருது வழங்கி கௌரவித்தது.
- 1974-ம் ஆண்டு ஆசியாவின் ‘நோபல் பரிசு’ என அழைக்கப்படும் “மகசேசே விருது” ரமோன் மகசேசே விருது நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
- 1975-ம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான “பத்ம விபூஷன்” விருதை அளித்து கௌரவித்தது இந்திய அரசு .
- 1988-ம் ஆண்டு மத்திய பிரதேச அரசு “காளிதாச சன்மான் விருது” வழங்கி கௌரவித்தது.
- 1990-ம் ஆண்டு “தேசிய ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது” இவருக்கு வழங்கப்பட்டது.
- 1996-ம் ஆண்டு “கலாரத்னா” விருதினை பெற்றார்.
- 1998-ம் ஆண்டு இந்திய அரசு, முதலாவது மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது.
- 2004-ம் ஆண்டு “வாழ்நாள் சாதனையாளர் விருது” பெற்றார்
- 2005ல் இந்தியா தபால் துறை இவரின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

- 2006 ல், திருப்பதி நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எம்.எஸ். அவர்களின் நினைவாக வெண்கல சிலை ஒன்றை நிறுவி கௌரவித்தது.
- ஐக்கிய நாடுகள் சபை இவரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது
- காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலைக்கு எம்.எஸ். அவர்களின் பெயரிட்டு கௌரவித்தார்கள்