மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
பிறப்பு: ஜூலை 6 , 1930
இடம்: சங்கரகுப்தம், கிழக்கு கோதாவரி மாவட்டம் (இந்தியா)
பணி: கர்நாடக இசைப் பாடகர், பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர்
இறப்பு: நவம்பர் 22 , 2016
மங்களம்பள்ளி முரளிகிருஷ்ணா ஆந்திர மாநிலம் (தற்போதைய) கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில் பிறந்தார். இசைக் கலைஞர்கள் பட்டாபிராமையா - சூர்யகாந்தம்மா இவரது பெற்றோர் ஆவர். பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் தந்தை, தாய் இருவருமே மிகச்சிறந்த இசைக் கலைஞர்கள் ஆவார்கள்.அவருடைய தந்தை மங்களம்பிள்ளை பட்டாபிராமையா அவர்கள், புல்லாங்குழல் வாசிப்பதில் சிறப்புப் பெற்றவராகவும் சிறந்த இசையமைப்பாளராகவும், திகழ்ந்தார். இவருடைய தாய் சூர்யகாந்தம்மா, வீணை மற்றும் வயலின் கலைஞர். சிறு வயதிலேயே தாயை இழந்த இவர் , தன்னுடைய தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். பின்னர், தியாகராஜரின் சீடர் கர்நாடக இசைப் பாடகர் “ஸ்ரீ பருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலுவிடம் முறையாக கர்நாடக இசையைப் பயின்றார்.
இசைப் பயணம்:
முரளிகிருஷ்ணாவுக்கு, தியாகராஜரின் மாணவர் பரம்பரையில் 4ஆவதாக வந்தவர் எனும் பெருமை உண்டு. இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே முதல் இசைக்கச்சேரி செய்தார். தனது சிறு வயதிலேயே இசை மேதை எனப் புகழப்பெற்றார். ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி, இவரின் பெயர்க்கு முன்னால் "பால" என்ற சொல்லைச் சேர்த்து அழைத்ததனால் அதன் பின்னர் பாலமுரளிகிருஷ்ணா என அனைவராலும் அழைக்கப்பட்டார்.
இளம் வயதிலேயே இசைப் பணியைத் தொடங்கிய இவர், தனது பதினைந்தாவது வயதில் கர்நாடக இசையின் ராகங்களில் "ச ரி க ம ப த நி" ஏழு ஸ்வரங்களையும் மேளகர்த்தா இராகத்தில் 72 கீர்த்தனைகளாகத் தொகுத்து வழங்கினார். வர்ணங்கள், கீர்த்தனைகள், தில்லானாக்கள், ஜாவளிகள் என்று 400-க்கும் மேற்பட்ட உருப்படிகளை தமிழ், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கில் உருவாக்கினார். பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தமிழ், கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, பஞ்சாபி மற்றும் வங்கம் என பல்வேறு மொழிகளைக் கற்றுணர்ந்த ஒரு ‘பன்முக மேதை’ ஆவார் . கர்நாடக இசைப் பாடகராக மட்டுமல்லாமல், மிருதங்கம், கஞ்சிரா, வயோலா மற்றும் வயலின் வாசிக்கவும் கற்றார்.
அமெரிக்கா, கனடா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, மத்திய கிழக்கு ஆசியா மற்றும் பல்வேறு நாடுகளில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை அரங்கேற்றி இந்திய இசையை வெளிநாட்டிற்கும் கொண்டு சேர்த்துள்ளார்.
திரைப்படத்துறையில்:
பால முரளிகிருஷ்ணா அவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்தும், இசையமைத்தும் உள்ளார். 1967 ஆம் ஆண்டு, வெளிவந்த “பக்தா பிரஹலாதன்” என்ற திரைப்படத்தில் நாரதராக நடித்து புகழ் பெற்றார் .
விருதுகள்:
- 1978-ம் ஆண்டு “சங்கீத கலாநிதி விருது”,சென்னை மியூசிக் அகாடமியால் வழங்கப்பட்டது.
- 2002-ம் ஆண்டு தமிழ் இசைச் சங்கம் மூலம் “இசைப் பேரறிஞர்” என்ற விருது வழங்கப்பட்டது.
- 2011-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது “குளோபல் இந்தியன் மியூசிக் அகாடமி” இவருக்கு வழங்கப்பட்டது.
- 1971-ம் ஆண்டு “பத்மஸ்ரீ” விருதை இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.
- 1991-ம் ஆண்டு மத்திய அரசு “பத்ம விபூஷன்” விருதையும் வழங்கி கௌரவித்தது .
- 2005-ம் ஆண்டு கந்தர்வ கான சாம்ராட் பட்டம் தமிழ் நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது
- செவாலியே விருதையம் பிரான்ஸ் அரசு வழங்கி கௌரவித்தது
- 2010-ம் ஆண்டு கேரள மாநில திரைப்பட விருதுகள் என்ற அமைப்பு சிறந்த பாரம்பரிய இசைப் பாடகர் விருது வழங்கியது:
No comments:
Post a Comment